பெரியபாளையம் கோயிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கத்தை ஸ்டேட் வங்கி மேலாளரிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைப்பு

திருவள்ளுர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை முன்னாள் நீதியரசர் (ஓய்வு) ராஜு முன்னிலையில் ஸ்டேட் வங்கி மேலாளரிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒப்படைத்தார்கள்.

அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த சட்டமன்ற மானியக்கோரிக்கை அறிவிப்பு 2021-2022-ன்படி கடந்த 10 ஆண்டுகாளக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும், இப்பணிகளை கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட 27 கிலோ பலமாற்றுப் பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கி, சாத்தூர் கிளை முதன்மை மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ. 24 இலட்சத்தை திருக்கோயிலுக்கு வைப்பு நிதி வாயிலாக பெறப்பட்டு, திருக்கோயிலின் திருப்பணிகளுக்கு செலவிடப்படுகின்றது. ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.20 கோடியாவது வைப்பு நிதியிலிருந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு வருமானம் வரும்.

அதன் தொடர்ச்சியாக இன்று (30.06.2022) திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இத்திருக்கோயிலுக்கு மாதத்திற்கு ரூ.2 இலட்சம் ரூபாய் வட்டித் தொகையாக வருகிறது. தங்கமும் பாதுகாப்பாக இருக்கிறது. அதில் வருகின்ற வட்டித் தொகையால் அந்த திருக்கோயிலுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற நல்ல நிகழ்வும் நடந்துக் கொண்டிருக்கிறது. எந்த திருக்கோயிலிலிருந்து தங்கங்களை உருக்காலைக்கு அனுப்புகிறோமோ அந்த திருக்கோயில் பெயிரிலேயே வைப்பு நிதி வைக்கப்பட்டு வருகின்ற வட்டித் தொகையில் முழுமையாக அந்த திருக்கோயில் திருப்பணிக்கு, அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற திட்டம் 1978 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்து வந்தது.

கடந்த ஆட்சியில் அந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தபடாததால் பல்வேறு திருக்கோயில்களில் 50 கிலோ, 100 கிலோ என்று பக்தர்களிடமிருந்து காணிக்கையாக வரபெற்ற பலமாற்று பொன் இனங்கள் கேட்பாடற்று கிடந்தது. இந்த நகை பிரிகின்ற பணிக்கு மூன்று மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்திற்கு உச்சநீதிமன்ற நீதியரசர் ராஜு, ஓய்வுபெற்ற நீதிபதி மாலா, இன்னொரு மண்டலத்திற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர ரவிச்சந்திரபாபு நியமிக்கப்பட்டார்கள். இந்நிதி திருக்கோயிலின் அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருக்கும்.

அரசு அறிவித்த திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த நேரத்தில் பாராட்டுககளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்கள். இத்திருக்கோயிலில் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

2022 - 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பிலே அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கும், அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் உட்பட மூன்று திருக்கோயில்களுக்கு தங்கத் தேர் பணிகளை அறிவித்துள்ளோம். 18 மாதங்களுக்குள் தங்கத்தேர் பவனியை இத்திருக்கோயில் காணும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: