3வது சுற்றில் ஜோகோவிச்: கோன்டவெய்ட், ரூட் அதிர்ச்சி

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் தனாசி கோக்கினாகிஸ் (26 வயது, 79வது ரேங்க்) உடன் நேற்று மோதிய ஜோகோவிச் (35 வயது, செர்பியா) 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 2 மணி நேரத்துக்கு நீடித்தது.மற்றொரு 2வது சுற்றில் களமிறங்கிய மூன்றாம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (6வது ரேங்க், 23 வயது, நார்வே) 6-3, 2-6, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் யுகோ ஹம்பெர்ட்டிடம் (24 வயது, பிரான்ஸ், 112வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வி கண்டார். அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன், பிரான்செஸ் டியபோ, பெல்ஜியம் வீரர் டேவிட் காபின் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 7-6 (7-1), 7-5 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை தெரசா மார்டிகோவாவை வீழ்த்தினார். எஸ்டோனியா நட்சத்திரம் அனெட் கோன்டவெய்ட் (26 வயது, 3வது ரேங்க்) தனது 2வது சுற்றில் ஜெர்மனியின் ஜூல் நியமியருடன் (22 வயது, 97வது ரேங்க்) நேற்று மோதினார். இந்த போட்டியில் கோன்டவெய்ட் 4-6, 0-6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கோகோ காப் (அமெரிக்கா), பெத்ரா குவித்தோவா (செக்.) 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், முன்னாள் நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் (40 வயது, அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

Related Stories: