21 வருடத்துக்கு பின் தந்தை அவமானத்திற்கு பழிதீர்த்த மகன்கள் கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது

சென்னை: புளியந்தோப்பில் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக மகன்கள் பழிதீர்த்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை புளியந்தோப்பு 5வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (எ) ஆதி சுரேஷ்(46), மவுண்ட்ரோடு பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஜோதி(40) என்ற மனைவியும், புருஷோத்தமன் என்ற மகன், கீர்த்தனா என்ற மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வேலை முடித்து ஆதி சுரேஷ் புளியந்தோப்பு 1வது தெரு மார்த்தம்மன் கோயில் அருகே வந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷை சரமாரியாக வெட்டியது. மேலும் அவரது தலையில் தொடர்ந்து சரமாரியாக வெட்டியதால் முகம் சிதைந்து சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆதி சுரேஷ் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 3 நபர்களின் உருவம் தெரிந்தது. ஆனால் அவர்கள் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நபர்களை விசாரித்தபோது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முரளி (எ) பாக்சர் முரளி என்பவர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து சென்றதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதில் புளியந்தோப்பு கிரே நகர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் (எ) சின்னா. இவரை கடந்த 2001ம் வருடம் முன்விரோதம் காரணமாக உயிரிழந்த ஆதி சுரேஷ் வெட்டியுள்ளார். இதில் சின்னாவின் இடதுகையில் பலத்த காயமடைந்து இடதுகை பாதி ஊனமாக மாறிள்ளது. இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகிறது. சின்னா வெட்டுப்பட்ட நாள் முதல் அடிக்கடி குடித்துவிட்டு, `எனது கை ஊனமானதற்கு ஆதி சுரேஷ் தான் காரணம். என்னால் அவனை எதுவும் செய்ய முடியவில்லை’ என்று தனது மகன்களிடம் கூறி மன வேதனை அடைந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சின்னாவின் மகன்களான மூத்த மகன் சதீஷ் (எ) பில்லா சதீஷ்(27), 2வது மகன் முரளி (எ) பாக்சர் முரளி (25), 3வது மகன் தினேஷ் (22) ஆகியோர் புளியந்தோப்பு பகுதியில் இருந்தபோது அடிக்கடி ஆதி சுரேஷ் இவர்களை மிரட்டி அவமானப்படுத்தி வந்துள்ளார். இதனால் பிரச்னை வரும் என்று எண்ணிய சின்னா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு புளியந்தோப்பு பகுதியில் இருந்து தனது குடும்பத்துடன் திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் ரோடு பகுதியில் தனியாக வாடகை வீடு பிடித்து குடும்பத்துடன் அங்கு சென்று விட்டார்.

அதன் பிறகு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சின்னாவின் 3 மகன்களும் புளியந்தோப்பு பகுதிக்கு வந்து தனது நண்பர்களுடன் பொழுதை கழித்து சென்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு பகுதியில் கேரம்போர்டு டோர்னமெண்ட் நடந்துள்ளது. இதில் முரளி மற்றும் ஆதி சுரேஷ் இருவரும் கலந்துகொண்டனர். இதில் முரளி வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதி சுரேஷ் அவரை அடித்து தான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்.

இதனால் ஆதி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு அதன்படி நேற்று முன்தினம் முரளி, சதீஷ், தினேஷ் மற்றும் திருவல்லிக்கேணியை சேர்ந்த சதீஷின் நண்பரான பிரகாஷ் (எ) முகேஷ்(23) ஆகியோர் சேர்ந்து ஆதி சுரேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். அப்போது இவர்கள் வந்த ஆட்டோவில் சின்னாவும் அமர்ந்து கொலையை வேடிக்கை பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து, புளியந்தோப்பு போலீசார் சின்னா, சதீஷ், முரளி, தினேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: