நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து படுகொலை... ராஜஸ்தான் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்; என்.ஐ.ஏ. விசாரணை!!!

உதய்பூர்:  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட டெய்லர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முகமது நபிகள் குறித்து  தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜ தகவல் தொடர்பாளராக இருந்த  நுபுர் சர்மா கூறியதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இருப்பினும், அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் சில தினங்களுக்கு முன் பதிவு வெளியிட்டார்.

இந்நிலையில், நேற்று மதியம் இவருடைய கடைக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவன், செல்போனில் படம் பிடிக்க, மற்றொருவன் கடைக்குள் சென்று துணி தைக்க அளவு எடுக்கும்படி லாலிடம் கூறினான். இதை நம்பி அவரும் அளவு எடுக்க தொடங்கினார். அப்போது, அந்த வாலிபன் திடீரென தன்னிடம் இருந்த வாளால் அவருடைய கழுத்தை அறுத்தார்.  அதே இடத்தில் லால் துடிதுடிக்க இறந்தார். இந்த காட்சிகள் முழுவதையும் வெளியே நின்றிருந்த மற்றொரு வாலிபன் வீடியோ எடுத்தான். பின்னர், இருவரும் ஒன்றாக இணைந்து, பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்தும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். இது  பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலையை செய்த வாலிபர்கள் ரியாஸ் அக்தர், கோஸ் முகமதுவை  போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க, ராஜஸ்தான் முழுவதும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. உதய்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அசம்பாவிதங்கள், வன்முறைகள் நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது பயங்கரவாத செயல் என்பதால் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்த ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.இந்த படுகொலைக்கு பாஜ, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அல்கொய்தா பாணி

வழக்கமாக, அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள்தான், கொலையை வீடியோ எடுத்து வெளியிடுவார்கள். அதே பாணியில், ராஜஸ்தானில் டைய்லர் கன்னையா லாலின் கொலையை 2 வாலிபர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டு இருப்பதால், இவர்கள் தீவிரவாத அமைப்பின் பின்னணியை கொண்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: