சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

ஆவடி: சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.  ஆவடியில் உள்ள தனியார் கவரிங் நகைக்கடையில் 17 வயது சிறுமி வேலை பார்க்கிறாள். அதே கடையில் தண்டையார்பேட்டையை சேர்ந்த சுபேர் உசேன்(24) என்ற வாலிபர் வேலை பார்த்துள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுமியை காதலிப்பதாக சுபேர் உசேன் ஆசைவார்த்தை கூறி வந்துள்ளார். பின்னர் சிறுமியை கடந்த வாரம் சேலம், ஈரோடு என பல்வேறு இடங்களுக்கு சுபேர் உசேன் அழைத்து சென்றுள்ளார். அங்கு பலமுறை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையே, தனது மகளை காணவில்லை என திருநின்றவூர் போலீசில் சிறுமியின் தந்தை புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தபோது, சுபேர் உசேனுடன் சிறுமி ஈரோட்டில் இருப்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு  திருநின்றவூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், அந்த சிறுமிக்கு சுபேர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்தது  தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபேர் உசேனை கைது செய்தனர். பின்னர் அவரை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: