காவல் நிலையத்தில் நிறுத்தி இருந்த இன்ஸ்பெக்டரின் வாகனம் உடைப்பு: 12 பேர் கைது

திருச்சி: திருச்சி சமயபுரம் அடுத்த அக்கரைப்பட்டியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் அடிக்கடி சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சிலர் நின்று கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களிடம் விசாரிக்க சென்றபோது, ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் விரட்டி சென்று ஒருவரை பிடித்தனர். விசாரணையில், பிடிபட்டவர் திருச்சி திருவானைக்கோவிலை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பிடிபட்டவரை பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு இரவு அழைத்துச் சென்று  ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பொதுமக்களில் சிலர் போலீஸ் நிலையத்திற்கு முன்பு நின்ற இன்ஸ்பெக்டரின் வாகன கண்ணாடியை கல் எறிந்தும், கம்பால் அடித்தும் உடைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாகன கண்ணாடியை உடைத்ததாக தெற்கு தழுதாழபட்டியைச் சேர்ந்த பெரியசாமி (22), தினேஷ்ராம்(27), விக்னேஷ் ராம்(21), தினேஷ்(26), திருப்பதி(27), நந்தகுமார்(27), மகேஸ்வரன் (41) உள்பட 12 பேரை சிறுகனூர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: