செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தி, மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண்ணை காரில் கடத்தி சென்று, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில், வேலூர் செல்ல அரசு பேருந்துக்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அங்கு வந்த ஆத்தூர், வடபாதி பாலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் சரவணன் (29) மற்றும் அவரது 3 நண்பர்களும் சேர்ந்து, அப்பெண்ணை காரில் கடத்தி சென்றனர். பின்னர் ஒரு மறைவான இடத்தில் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, அன்றைய தினம் முழுவதும் சரவணனும் அவரது 3 கூட்டாளிகளும் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய அப்பெண், நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி அழுதிருக்கிறாள். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் தாய் புகார் அளித்தார்.

கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளியான சரவணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சரவணனின் கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: