10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு பயிற்சி-ஜூலை, ஆகஸ்டில் துணைத் தேர்வு எழுத ஏற்பாடு

நெல்லை : கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு பள்ளிகளில் மீண்டும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஜூலை, ஆகஸ்ட் மாதம் துவங்கும் சிறப்பு துணைத் தேர்வு எழுத பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 - 21, 2021 - 22 ஆகிய கல்வி ஆண்டுகள் பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. 2 ஆண்டுகள் நேரடி வகுப்புகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனினும் மாணவர்கள் நலன் கருதி கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசு பொதுத்தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

இருந்த போதிலும் 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகளை தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதவில்லை. இதையடுத்து மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன் கருதி தேர்வு எழுதாத, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து சிறப்பு துணைத் தேர்வு எழுதவும், அவர்களது கல்வியை எந்தவித தடங்கலுமின்றி தொடரவும் பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 தேர்வு எழுதாத, பங்கேற்காத மாணவ, மாணவிகளை கண்டறிந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித் துறை சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ,11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மற்றும் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு  பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.

அதன்படி முதற்கட்டமாக அம்பை அரசு மேல்நிலைப்பள்ளி, மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பணகுடி அரசு மேல்நிலைப்பள்ளி,  நவ்வலடி டிஎம்என்எஸ்எஸ்ஏ மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரிரெங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப் பள்ளி, உள்ளிட்ட மொத்தம் 16 பள்ளிகளில் தற்போது சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப் பயிற்சியை மாவட்ட திட்ட அலுவலர் சிவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கியுள்ளனர். மற்ற பள்ளிகளிலும் படிப்படியாக தேவைப்படும் மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் அமலா தங்கத்தாய், டைட்டஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வு  எழுதாதவர்கள் 1297 பேர், தேர்வில் தவறியவர்கள் 2631 பேர் என மொத்தம் 3,928  மாணவ, மாணவிகள். இதில் தற்போது வரை 681 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ்2 வகுப்பில்  தேர்வு எழுதாத மாணவர்கள்  759, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் 733  என மொத்தம் 1522 பேர் ஆவர்.

இதில் சிறப்பு பயிற்சி  125 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிளஸ்1 தேர்வு முடிவுகள் நேற்று தான் வெளியாகி உள்ளன. இதில் தேர்வு எழுதாத, தவறிய மாணவர்களும் துணைத் தேர்வு  எழுத சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு துணைத் தேர்வு பிளஸ்2 வகுப்பிற்கு ஜூலை 25ம் தேதியும், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பிற்கு ஆக.2ம் தேதியும் தொடங்குகிறது. தேர்வுக்கு முன்பு வரை சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வியை தொடரலாம்

இதுகுறித்து நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி கூறுகையில், 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 தேர்வு எழுதாத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பு பயிற்சி பெறலாம். ஜூலை, ஆகஸ்ட் மாதம் சிறப்பு துணைத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதாத மற்றும் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சிறப்பு பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் தேர்வு எழுதாத மாணவர்கள் சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்று தங்களது கல்வியை தொடர முடியும். அதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: