சாலை பராமரிப்பு பணி நிறைவு திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

களக்காடு : சாலை பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோயில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலுக்கு வனத்துறை சோதனை சாவடியில் இருந்து 4 கி.மீ.தூரம் மலைப்பாதையில் நடந்து மட்டுமே செல்ல முடியும். சில தனியார் ஜீப்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதை கரடுமுரடானதாக காணப்பட்டது.

இந்நிலையில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து, திருமலைநம்பி கோயில் வரையிலான மலைப்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இதையடுத்து திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் அறிவித்தனர்.

மலைப்பாதையில் முதல் பாலத்தில் இருந்து, கோயில் வரை வீல் டிராக் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. சாலை பராமரிப்பு பணிகள் மிகவும் மந்தமாக ஆமை வேகத்தில் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சாலை பராமரிப்பு பணிகள் முழுமையடைந்துள்ளன. ஆனால் பக்தர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வந்தனர். தற்போது சாலை பராமரிப்பு பணியால் மீண்டும் கோயிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் கடந்த 3 மாதங்களாக தடை விதித்துள்ளது, பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே சாலை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: