பாளையங்கோட்டை அருகே பரிதாபம் ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் பலி

செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே நாட்டார்குளத்தை சேர்ந்தவர் ராஜி, ஆட்டோ டிரைவர். முத்தாலங்குறிச்சி, வசவப்பபுரம், ஊத்துப்பாறை பகுதியை சேர்ந்த குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி பாளை. பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று காலை 8 மணிக்கு 8 மாணவ - மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அனவரதநல்லூர் தென்னம்பாண்டி சாஸ்தா கோயில் அருகே எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் ராஜி தப்பியோடி விட்டார். இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஊத்துப்பாறையை சேர்ந்த செல்வநவீன் (4) சம்பவ இடத்திலேயே பலியானான்.

முத்தாலங்குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நவீன்குமார், மகள்கள் செல்வராகவி, முகிலா உள்ளிட்ட 7 பேரும் காயமடைந்தனர். அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முறப்பாடு போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் ராஜிவை தேடி வருகின்றனர்.விபத்தில் பலியான மாணவன் செல்வநவீன், நேற்று தான் முதல் நாளாக ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளான். ஆனால் முதல் நாளே விபத்தில் சிக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் பேசியபடி ஓட்டியதால் விபத்து: விபத்து குறித்து காயமடைந்த மாணவர்கள் கூறுகையில், ஆட்டோ டிரைவர் செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக  ஓட்டினார். திடீரென செல்போன் காதில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததால் அதனை பிடிக்கும்போது விபத்து ஏற்பட்டது என்றனர்.

Related Stories: