பள்ளி, நிறுவனங்கள் மூடல் இலங்கையில் சுத்தமாக காலியாகும் பெட்ரோல்: ஒட்டுமொத்த நாடே முடங்குகிறது

கொழும்பு: இலங்கையில் தற்போது இருப்பில் உள்ள பெட்ரோல், டீசல் இன்னும் சில நாட்களில் தீரும் நிலை உள்ளது. இதனால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து நிறுவனங்களும் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய உத்தரவிட்டுள்ளன. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி தட்டுப்பாட்டால், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவை வாங்க முடியாமல் அரசு தவிக்கிறது. இந்தியா உதவியதால் கடந்த சில மாதங்கள் தாக்குபிடிக்க முடிந்தது. இதற்கிடையே, இந்தியாவின் எரிபொருள் கடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், இலங்கையிடம் இருப்பில் உள்ள பெட்ரோல், டீசல் இன்னும் சில நாட்களே வரும் நிலையில் உள்ளது. இதனால், பெட்ரோல் பங்குகளில் டோக்கன் விநியோகித்து அதன்படி மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், 4 நாட்களுக்கும் மேலாக டோக்கனுடன் மக்களுடன் பெட்ரோல் பங்க் முன்பாக நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அமைச்சர்கள் குழு நேற்று ரஷ்யா சென்றது. இதற்கிடையே, பொருளாதார ரீதியாக இலங்கைக்கு உதவது தொடர்பாக அமெரிக்க பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

வெளியுறவு துறை அமைச்சகத்தின் துணை உதவி செயலாளர் கெல்லி கெய்டர்லிங், கருவூலத்துறை துணை உதவி செயலாளர் ராபர்ட் கப்ரோத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி ஜே சங் ஆகியோர் நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தனர்.  இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் 10ம் தேதி வரை துறைமுகம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும் என்றும் மற்ற அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: