100 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டு கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் ரஷ்யா: உக்ரைன் போரால் பாதிப்பு

மாஸ்கோ: பொருளாதார தடையால் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் ரஷ்யா தவித்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்  பொருளாதார தடை விதித்துள்ளன.  இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க டாலரில் எந்த வர்த்தக பண பரிமாற்றத்தையும் ரஷ்யாவால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்  நூறு ஆண்டுகளில் இல்லாதவகையில் ரஷ்யா தனது வெளிநாட்டு கடனை முதன்முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை. உக்ரைன் போருக்கு பின் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு, கடந்த மே 27 அன்று வட்டி செலுத்துவதற்கான 30 நாள் சலுகை காலம் நேற்று முன்தினம் இரவுடன் முடிந்தது. இதில் கடனை செலுத்த ரஷ்யா தவறிவிட்டது. ரஷ்யாவின் டாலர் உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க கையிருப்பு வெளிநாடுகளில் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெருக்கடியை சமாளிக்க போதுமான நிதியை ரஷ்யா கொண்டிருந்தாலும், சர்வதேச கடன் கொடுத்தவர்களுக்கு பணம்  செலுத்தும் வழிகளை மேற்குநாடுகள் மூடி உள்ளதால் பணம் செலுத்த முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது என்று ரஷ்யா கூறி உள்ளது. 1918ம் ஆண்டு போல்ஷ்விக் புரட்சியின் போது ரஷ்ய பேரரசு வீழ்ச்சியடைந்து சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டபோது ரஷ்யா கடைசியாக சர்வதேச கடனை திருப்பி செலுத்தவில்லை. கடந்த 1998ம் ஆண்டு நிதி நெருக்கடி மற்றும் ரூபிள் சரிவின் போது ரஷ்யா தனது உள்நாட்டு கடன்களை செலுத்தத் தவறியது. ஆனால் சர்வதேச உதவியுடன் அதனை பின்னர் திருப்பிச் செலுத்தியது. அப்போது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்தன. ஆனால் அதுபோன்ற நிலைமை தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: