தமிழகம், புதுச்சேரியில் ஜூன் 29, 30 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 29,30ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஜூன் 29, 30 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 5, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: