சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!: பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு..!!

கடலூர்: பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலங்களாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில். இந்த கோயிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் என ஆண்டுக்கு இருமுறை மிகப்பெரிய உற்சவம் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆனித்திருமஞ்சன திருவிழா கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்களுக்கு உள்ளேயே பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

தற்போது கொரோனா குறைந்துள்ளதால் விமர்சியாக நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வேத மந்திரங்கள் முழங்க காலை  7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கோயிலின் உற்சவ ஆச்சாரியார் க.ந.கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்து கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 5ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்று நடராஜர் சிவகாமி சுந்தரி உள்ளிட்ட 5 சாமிகள் தேர்களில் வலம் வருவர். அன்றிரவு மகா அபிஷேகம் நடைபெறும். மறுநாள் 6ம் தேதி மிகப்பெரிய உற்சவமான ஆனித்திருமஞ்சன திருவிழா தரிசனம் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: