கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தையொட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு: கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆய்வு

கூடுவாஞ்சேரி: சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் 393.74 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பேருந்து நிலையம் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு, பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், நகராட்சியாக இருந்த தாம்பரம் தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தாம்பரத்தில் கமிஷனர் அலுவலகமும் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.

இதில், வண்டலூர் கோட்டத்தில் அடங்கிய ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களை ஒருங்கிணைத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக மையப்பகுதியை அதிகாரிகள் தேர்வு செய்வதற்காக முடிவு செய்தனர். இதில், ஏற்கனவே வேங்கடமங்கலம் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் கொண்ட புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர்.

பொதுமக்கள் புகார் கொடுப்பதற்கு ஏதுவாக பஸ் வசதி மற்றும் அனைத்து வசதிகளும் இல்லாததால் வேங்கடமங்கலம், கீரப்பாக்கம் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் ஒட்டியபடி அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்ய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஆர் ராகுல்நாத் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினர். அப்போது, வண்டலூர் தாசில்தார் பாலாஜி உட்பட போலீஸ் உதவி கமிஷனர், இணை கமிஷனர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: