மழைக் காலம் தொடங்குவதற்குள் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்வாய் பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8,000 நெல்மூட்டைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படாததால் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. இது போன்ற நிலை இனி ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தெருக்களில் மழைநீர் தேங்காமல் செல்வதற்கும், கழிவுநீர் பாதைகளை சரி செய்வதற்கும், கால்வாய், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளைப் பராமரிப்பதற்கும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் அதனை மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே முழுமையாக முடித்து விட வேண்டும். காரணம் இப்போது பணிகள் நடைபெறும் போதே மழை பெய்து பணியில் தடை ஏற்பட்டு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

  எனவே மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே மாநிலம் முழுவதும் மழைநீரினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நெல் உள்பட பல்வேறு விவசாயப் பயிர்களையும், மழை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து பொது மக்களையும் பாதுகாக்க நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் முறையாக முழுமையாக முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: