பலத்த காற்றுடன் மழை வயர் அறுந்து மின்தடை: பொதுமக்கள் அவதி

திருவொற்றியூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பலத்த காற்றுடன் சில மணி நேரம் மழை பெய்தது. மழை பொழிவு நின்றாலும் காற்று வீசிக்கொண்டே இருந்தது. இதனால் மாதவரம் பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலையோரம் இருந்த மரக்கிளைகள் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.

இந்த நிலையில் நள்ளிரவு மணலி மண்டலம் 19வது வார்டுக்கு உட்பட்ட மாத்தூரில் காமராஜர் சாலையோரத்தில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின் வயர்கள் அறுந்து விழுந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக மாத்தூர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், சாலைகள் ஈரமாக இருந்ததால் பொதுமக்களை மின்சாரம் தாக்காதவகையில் மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வயர் அறுந்துவிழுந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதமின்றி தப்பினர். மின்சாரம் துண்டிப்பால் இரவில் தூங்கமுடியாமலும் மின்சாதனங்களை இயக்க முடியாமலும் மக்கள் அவதிப்பட்டனர்.

Related Stories: