சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் 38 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் கைது வேட்டை: உபி.யில் 5 பேர் சிக்கினர்

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில், 38 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் ஐந்து பேரை கடந்த 2 நாட்களில் சிறப்புப்படை கைது செய்துள்ளது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை நடந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் நகரில் நடந்த கலவரத்தில் 127 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு படை அமைக்கும்படி, இம்மாநில அரசுக்கு கடந்த 2017ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு படை, ஏற்கனவே 6 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது. இந்நிலையில், கித்வாய் நகரை சேர்ந்த ரவிஷங்கர் மிஸ்ரா (76), போலா காஷ்யப் (70), ஜஸ்வந்த் ஜதாவ் (68), ரமேஷ் சந்திர தீக்ஷித் (62) மற்றும் கங்கா பாஷ் சிங் (60) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடந்து 38 ஆண்டுகள் ஆன பிறகும், இப்போதும் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளாக 96 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில் 22 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். 38 ஆண்டுகளுக்கு பிறகு, சந்தேகிக்கப்படும் 21 பேரில் இதுவரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: