ரஷ்யா தொடர் தாக்குதல்: கிழக்கு உக்ரைனில் இருந்து 20 லட்சம் பேர் வெளியேற்றம்

மாஸ்கோ: ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதலால் கிழக்கு உக்ரைனில் இருந்து 20 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றிய போதும் மற்ற இடங்களை பிடிக்க கடுமையான சண்டை நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில், கிழக்கு கார்கிவ் பகுதியில் நேற்று ரஷிய ஷெல் நடத்திய தாக்குதலில், 8 வயது குழந்தை உள்பட 15 பேர் கொல்லப்பட்டதாக ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ரஷ்ய ஷெல் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். இதுபோன்று ஏற்கனவே 4 வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன. இது பயங்கரவாதம். மனிதகுலத்திற்கு எதிரான குற்ற செயல். தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தற்போது, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி மீது ரஷ்யா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனால் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதியை சேர்ந்த 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைன் புகைப்பட பத்திரிகையாளர் மாக்ஸ் லெவினும், வீரர் ஒலக்சிய் செர்னிஷோவும் போரின் ஆரம்ப காலத்தில் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பத்திரிகை சுதந்திர குழுவான எல்லையில்லா நிருபர்கள் குழு நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதா என்பதையும் உறுதிசெய்ய இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: