பரபரப்பான அரசியல் சூழலில் மராட்டிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது: சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கெடு..!!

மும்பை: பரபரப்பான அரசியல் சூழலில் மராட்டிய மாநில அமைச்சரவை கூட்டம் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் காணொலி மூலம் தொடங்கியது. 46 சிவசேனா எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள சூழலில் அமைச்சரவை கூடியுள்ளது. தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் உள்ளதால் உத்தவ் தாக்கரே பதவி விலகலாம் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கும் நிலையில் இன்று மாலை சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று மாலைக்குள் மும்பை திரும்ப கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு நடக்கும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க கொறடா உத்தரவிட்டுள்ளது. கட்சி விதிகளை மீறும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திரும்பி வரும் வரை முதலமைச்சர் ராஜினாமா தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று சஞ்சய் ராவத் பதில் அளித்துள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வாரா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முகாமிட்டுள்ளதால் மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

Related Stories: