இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்; மைசூருவில் பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மைசூருவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, யோகாசனங்களை செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது. யோகாசனப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் மோடி, ஐநா சபையில் இதற்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். அதையொட்டி, 2014ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சர்வதேச யோகா தினத்தில் (ஜூன் 21) எந்தவித நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டுக்கான 8வது சர்வதேச யோகா தினம் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் ‘மனித குலத்திற்கான யோகா’ என்று பெயரிடப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில்  நாடு முழுவதும் 75 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சர்வதேச யோகா  தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்த இடங்களில் நடைபெற்ற  நிகழ்ச்சிகளில் 75 ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றனர். பாஜக சார்பில் நாடு  முழுவதும் 75,000 இடங்களில் யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி முப்படைகள், எல்லையோர காவல் படை, ஒன்றிய  அரசுத் துறைகள் சார்பாகவும், சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும்  கடைபிடிக்கப்பட்டது.

பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் உள்ள மைசூரு அரண்மனை மைதானத்தில் நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த மைதானத்தில் கூடியிருந்த 15,000 பேருடன் இணைந்து யோகாசனம் செய்தார். பிரதமர் மோடியுடன் ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முக்கிய பிரமுகர்கள் யோகாசனம் செய்தனர். எட்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இந்திய நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் அற்புதமான பாரம்பரிய கலையான யோகா, மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமல்ல. இன்று உலகம் முழுவதும் வாழ்க்கையின் முறையாக யோகாவை மாற்றி வருகிறது. உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி உலக ஆரோக்கியத்திற்கும் யோகா வழிகாட்டுகிறது. ஒட்டுமொத்த மனித குலத்திற்குமான திருவிழாவாக யோகா மாறியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

Related Stories: