ஈஸ்ட்போர்ன்: காயம், தொழில் ஆர்வம் காரணமாக ஓராண்டாக விளையாடாத அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் இன்று தொடங்கும் ஈஸ்ட்போர்ன் ஓபனில் ஆன்ஸ் ஜெபருடன் இணைந்து இரட்டையர் பிரிவில் களம் காணுகிறார். அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமும் முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ்(40) சுமார் ஓராண்டாக எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளிலும் அதிக கிராண்ட ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற பெருமைக்கு உரியவர் செரீனா. இவர் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள ரபேல் நடால்(ஸ்பெயின்), ஸ்டெப்பி கிராப்(ஜெர்மனி) ஆகியோர் தலா 22 பட்டங்களை வென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில்தான் அவர் கடைசியாக விளையாடினார். அப்போது காயத்தால் அவதிப்பட்ட செரீனா முதல் சுற்று ஆட்டத்தின் பாதியிலேயே கண்ணீருடன் வெளியேறினார். அதன் பிறகு எந்தப்போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. காயம் சரியான பிறகும் போட்டிகளில் களம் காணவில்லை. சொந்த தொழில் மேம்பாட்டில் ஆர்வம் காட்டினார்.
கூடவே அவரது தந்தையின் வாழ்க்கைஅடிப்படையில் வெளியான ‘கிங் ரிச்சர்டு’ திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் ஈடுபட்டு வந்தார். எனவே கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன், இந்த ஆண்டு ஆஸி ஓபன், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் விளையாடவில்லை. போட்டிகளில் பங்கேற்காததால் அவர் வெற்றிப் புள்ளிகளை இழந்து தரவரிசையில் 1208வது ரேங்கில் பின் தங்கி உள்ளார். அதனால் விம்பிள்டன் ஓபனில் இந்த முறை பங்கேற்பதில் சிக்கல் இருந்தது. இருப்பினும் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்றவர் என்ற அடிப்படையில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜூன் 27ம் தேதி தொடங்க உள்ள விம்பிள்டன்னில் செரீனா மீண்டும் களம் காணுகிறார்.அதற்கு முன்னோட்டமாக இங்கிலாந்தில் நடக்கும் ரோத்சே சர்வதேச ஈஸ்ட்போர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா களம் காணுகிறார். இரட்டையர் போட்டியில் மட்டும் விளையாட உள்ள அவருடன் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர்(27வயது, 4வது ரேங்க்) உடன் இணைந்து களம் காணுகிறார். இந்தப்போட்டி இன்று நடக்கிறது.