2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகும் பாஜக; எம்எல்ஏவுக்கு 25 பூத்; எம்பிக்கு 100 பூத்: பலவீனமான ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கீடு

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பலவீனமான வாக்குச்சாவடியில் கவனம் செலுத்த எம்எல்ஏவுக்கு 25 பூத்தும், எம்பிக்கு 100 பூத்தும் பாஜக தலைமை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ளதால், அதற்கான தேர்தல் பணிகளை ஆளும் பாஜக முடுக்கிவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் பாஜகவுக்கு பலகீனமான வாக்குச்சாவடிகளையும், எந்த வாக்குச்சாவடியில் பாஜக ஓட்டுகள் சரிந்தது என்பதை கண்டறிந்துள்ளனர்.

அந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி ஒன்றிய பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உத்தரபிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் அவ்னீஷ் தியாகி கூறுகையில், ‘கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த இரண்டு மக்களவை தேர்தல் மற்றும் இந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்காத அல்லது பலவீனமாக இருந்த வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுபோன்ற பலவீனமான சாவடிகளில் கவனம் செலுத்த ஒவ்வொரு லோக்சபா எம்பி மற்றும் ராஜ்யசபா எம்பிகளுக்கும் தலா 100 வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எம்எல்ஏக்களுக்கு குறைந்தது 25 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குகள் பெற்ற பூத்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தச் சாவடிகளுக்குச் சென்று தொண்டர்களைச் சந்தித்து அரசின் நலத்திட்டங்களைப் பற்றி வாக்காளர்களிடையே எடுத்து ெசால்வார்கள். 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தேர்தலை மனதில் வைத்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: