மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் அவதி

மஞ்சூர்: மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. பெட்ரோல் பங்க், ஐயப்பன் கோயில் ஆகியவையும் அமைந்துள்ளது. மஞ்சூரில் இருந்து பிக்கட்டி, கிண்ணக்கொரை, அப்பர்பவானி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் வாகனப்போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுதியாக காணப்படும்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வௌியேறும் கழிவுநீர் அனைத்தும் சாலையில் வழிந்தோடுகிறது.கழிவுநீர் கால்வாய் இல்லாதநிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கழிவு நீருடன் மழை வெள்ளமும் சாலையோரத்தில் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக மருத்துவமனைக்கு நடந்து செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துடனேயே சென்று வரவேண்டியுள்ளதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் சாலையோரத்தில் மழை வெள்ளத்துடன் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதையடுத்து சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தவிர்க்கவும் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: