‘அக்னிபாதை’ திட்டம் உலக நாடுகளுக்கு வழிகாட்டி: தூத்துக்குடியில் கவர்னர் பேச்சு

தூத்துக்குடி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் நடந்த வ.உ.சி 150வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 8 பேருக்கு வஉசி விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது: இளைய தலைமுறை நம் தேசத்தலைவர்கள் ஆற்றிய சேவைகளை, அர்ப்பணிப்புகளை, கடமைகளை நினைவு கொள்ள வேண்டும். இங்கே அமர்ந்திருப்பவர்கள் சனாதன தர்மத்தை உலகறியச் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். நாம் அந்த நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம். அரசின் நல்ல திட்டங்கள் சிலரால் தவறாக கொண்டு செல்லப்படுகிறது. ‘‘அக்னிபாதை’ திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்.

இத்திட்டத்தில் 4 வருடம் பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் நாட்டுப்பற்று உருவாகும். இளைஞர்களிடம் தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் உருவாகும். 4 ஆண்டுக்குப் பிறகு சுயதொழில் தொடங்கும் வகையில் பொருளாதார ரீதியாக அந்த இளைஞன் உயர்வான். இத்திட்டத்தை தவறாக புரிந்து நாட்டின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுகின்றனர். இது வருத்தத்தை அளிக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் இத்திட்டம் முக்கிய பங்காற்றும். 2047ல் இத்திட்டம் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: