அக்னிபாதை போராட்டத்தால் தமிழகம் முழுவதும் ரயில்வே ஸ்டேஷன்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

சேலம்: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி உள்பட முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஎப் சிறப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் அக்னிபாதை என்னும் திட்டத்தின் மூலம் 4 ஆண்டு பணிக்காக ஆட்கள் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இத்திட்டத்தால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், ராணுவத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை சீர்குலைப்பதாகவும் கூறி தொடர் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். வடமாநிலங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும், ரயில்வே ஸ்டேஷன்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் இன்று காலை இளைஞர்கள் போராட்டத்தை நடத்தினர். இங்கும் ரயில்வே ஸ்டேஷன்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள அனைத்து முக்கிய ரயில்வே ஸ்டேஷன் களிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த ஆர்பிஎப் தலைமை ஆணையர் ஈஸ்வரராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பேரில், தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விருத்தாச்சலம், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் என முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் 200க்கும் மேற்பட்ட ஆர்பிஎப் மற்றும் தமிழக ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஆர்பிஎப் சிறப்பு படை பிரிவை அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.

ஸ்டேஷன் நுழைவுவாயில்களில் அதிகபடியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி ஆர்பிஎப் அதிகாரிகள் கூறுகையில், “அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து போராடும் நபர்கள், வட இந்தியாவில் ரயில்களுக்கு தீ வைத்து விட்டனர். அதனால், ரயில்வே ஸ்டேஷன்களில் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளோம். தமிழ்நாடு, கேரளாவில் அனைத்து முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களிலும் 24 மணி நேர பாதுகாப்பிற்கு அதிகபடியான போலீசாரை ஈடுபடுத்தியுள்ளோம். முகாம்களில் இருந்த ஆர்பிஎப் சிறப்பு படை பிரிவினர் இப்பணிக்கு கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: