மாற்றுத்திறனாளிக்கு கிடைக்குமா பேட்டரி நாற்காலி? தந்தையை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து 3 கி.மீ தூரம் தள்ளிக்கொண்டு வரும் மாணவன்

*தா.பேட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்

முசிறி : தா.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றுத்திறனாளியான தனது தந்தையை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து 3 கி.மீ. தூரம் தள்ளிக் கொண்டு வந்த மாணவனை கண்ட பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். தா.பேட்டை அருகே உள்ள தேவானூர் கிராமத்தை சேர்ந்த மாணவன் திலகன். தா.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தந்தை சரவணன்(41). போர்வெல் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்த சரவணனுக்கு கடந்த 2018ம் ஆண்டு தலையில் ஏற்பட்ட கட்டி காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு மாற்றுத்திறனாளியானார். இதையடுத்து இவரது மனைவி சசிகலா(34), 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்று தனது கணவர் சரவணன், மகன்கள் திலகன் (7ம் வகுப்பு), விவின் (4ம் வகுப்பு) ஆகியோரையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் சரவணன் குடும்ப சூழ்நிலை காரணமாக மகன் திலகனை மாணவர் விடுதியில் தங்கி படிக்க வைப்பதற்காக தலைமை ஆசிரியரை சந்திக்க மகன் படிக்கும் பள்ளிக்கு புறப்பட்டார். இதையடுத்து மாணவன் தன் தந்தை சரவணனை சக்கர நாற்காலியில் அமர வைத்து தேவானூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் தா.பேட்டையில் தான் பயிலும் அரசு பள்ளிக்கு தள்ளிக் கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளியான சரவணனிடம் கேட்டதற்கு, 2018ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட என்னையும், என் குடும்பத்தையும் கூலித்தொழில் செய்து என் மனைவி காப்பாற்றி வருகிறார். எனக்கு அரசால் வழங்கப்பட்ட நாற்காலி முன்புறம் சுழலும் சிறிய சக்கரங்கள் இருப்பதால், முன்புறமாக செல்ல முடியாது. அது தவிர எனது ஒரு கை செயலிழந்ததால் சக்கர நாற்காலியை இயக்குவது இயலாது.

பள்ளிக்கு வருவதால் எனது மகன் சக்கர நாற்காலியில் அமர வைத்து பின்புறமாக என்னை தள்ளிக்கொண்டு வந்தார். மகன் திலகன் பள்ளிக்கு சென்ற வேளையில் ஒரு காலால் சக்கர நாற்காலியை பின்புறமாக உந்தி விட்டுக் கொண்டே வந்து என் குடும்ப வேலைகளை கவனிக்க நான் தா.பேட்டைக்கு 3 கி.மீ. தூரம் தனியாகவும் வருவேன். 60 சதவீத ஊனம் என மருத்துவர் வழங்கிய சான்றிதழ் உள்ளது. போர்வெல் லாரியில் டிரைவராக வேலை பார்த்து பல மாவட்டங்களுக்கு லாரியை ஓட்டி சென்ற என்னை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து எனது மகன் தள்ளிக் கொண்டு வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

மாவட்ட நிர்வாகம் எனக்கு பேட்டரியுடன் கூடிய சக்கர நாற்காலி வழங்கி உதவ வேண்டும் என்று கூறினார். பள்ளி விட்டு வந்த நேரம் தந்தையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல சக்கர நாற்காலியில் அமர வைத்து பின்புறமாக தள்ளி செல்லும் மகனும், மகன் பள்ளி சென்றபோது ஒரு காலால் உந்திக்கொண்டு பின்புறமாகவே வெளியிடங்களுக்கு கடும் வெயிலில் செல்லும் சரவணனையும் பொதுமக்கள் பரிதாபத்துடன் பார்த்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

Related Stories: