நீர்வழி போக்குவரத்தை ஏற்படுத்த பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும்: சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை

செய்யூர்:பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி அதில் நீர் போக்குவரத்து ஏற்படுத்தித் தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.சோழமண்டல கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாயாக விளங்குகிறது பக்கிங்காம் கால்வாய். ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியிலிருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் வரை பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கால்வாயின் நீளம் 420 கி.மீ., இது சென்னையின் பிரதான நீர்வழித்தடமாக இந்த பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் செல்லும்  வழியில் உள்ள சதுப்பு நிலங்கள், உப்பு தயாரிக்கும் இடமாகின. அந்த காலத்தில், சென்னைக்கு வடக்கு பகுதியிலிருந்து எள்ளு, விறகு, வரட்டி, நெல், கருவாடு போன்ற அனைத்து பொருட்களும்  படகுகள் மூலம் இந்த கால்வாய் வழியே கொண்டு சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து இவ்வழியாக பொருட்களை ஏற்றி சென்று வந்ததால்  போக்குவரத்து செலவு குறைந்ததோடு நீண்ட தூரம் பயணிக்கும் நேரமும் குறைந்தது. இத்தகைய சிறப்பு மிக்க பக்கிங்காம் கால்வாய் கடந்த பல ஆண்டு காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.  இதனால், வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கால்வாய் தூர்ந்து மறைந்து போகும் நிலை உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில். இந்த கால்வாய் உருவாக்கப்பட்டு 3 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட படகுகள் இந்த கால்வாய் வழியாக நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்றது.  

அப்போது, சுங்க கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், அன்றைய ஆட்சியாளர்கள் இதன்மூலம் அரசுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி வந்தனர். நாளடைவில் இந்தக் கால்வாயில் நீர்வழிப் போக்குவரத்து  நின்றது.

கால்வாயும் முறையாக பராமரிக்கப்படாமல் போனது. தற்போது, இந்த கால்வாய் தூர்ந்து நீர்மட்டத்தின் அளவும் குறைந்துள்ளது. குறிப்பாக செய்யூர் தாலுகா பகுதியில் அமைந்துள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த பக்கிங்காம் கால்வாய் பெரிதும் தூர்ந்து போய் உள்ளது. தற்போது, உப்பு உற்பத்தியும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த கால்வாய் மீண்டும் உயிர் பெற தமிழக அரசு கால்வாய் தூர்வாரி மீண்டும் நீர்வழி போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும். கால்வாய் தூர்வாரப்பட்டால் மீன் உற்பத்தி அதிகரிக்கும். மீனவர்கள் மீன்கள் வளர்ப்பு செய்து பெரிதும் பயன்பெறுவார்கள். இந்த கால்வாயில் நீர் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டால் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிக்கும்.  படகு குழாம்களில் படகு சவாரி நீட்டிக்கப்பட்டு அதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: