கோபி அருகே கூத்தாண்ட மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோபி: கோபி அருகே உள்ள கொளப்பலூரில் விநாயகர், கூத்தாண்ட மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோபி அருகே உள்ள கொளப்பலூரில் பல ஆண்டுகள் பழமையான விநாயகர், கூத்தாண்ட மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கோயில் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் கடந்த 15ம் தேதி அம்மன் கோயில் பதியில் உள்ள பச்சைநாயகி அம்மன் கோயிலிலிருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து பச்சைநாயகி அம்மன் ஆலயத்தில் இருந்து தீர்த்தகுடங்கள், கலசங்கள், முளைப்பாலிகை புறப்பட்டு கூத்தாண்ட மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது 16ம் தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, காப்பு அணிவித்தல், கும்பங்களில் இறை சக்தியை எழுந்தருள செய்தல், முதல்கால யாக பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில், நாடி சந்தனம், தீபாராதனை, கும்ப கலசங்கள் கோயிலை வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து டாக்டர் புவனேஷ்வரன் தலைமையில், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் விநாயகர் மற்றும் கூத்தாண்ட மாரியம்மன் கோயில் கலசங்களுக்கு அருள்மலை சிவானந்த குருக்கள், பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் சிவாகம முறைப்படி புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தொடர்ந்து சாமிக்கு அபிஷேக அலங்கார பூஜை, திருக்கோடி தீபம் ஏற்றுதல், தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் கொளப்பலூர், சிறுவலூர், அம்மன் கோயில் பதி, சாணார்பாளையம், தாழ்குனி, மூப்பன் சாலை, செட்டியாம்பாளையம், காமராஜ்நகர், யூனிட் நகர், வேட்டைகாரன் கோயில், வாய்க்கால் மேடு, கோபி, ஓலப்பாளையம், பதிபாளையம், ஆயிபாளையம் உள்ளிட்ட பலவேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி சிறுவலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: