தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியில் சிவகங்கை பூங்கா சீரமைக்கும் பணி மும்முரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களின் மிகப்பெரிய பொழுது போக்கு தலமாக இருந்த சிவகங்கை பூங்கா சீரமைக்கும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பில் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது பொதுமக்கள் பூங்காவை சுற்றி வரும் வகையில் பிளாட்பார்ம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சரித்திர புகழ்மிக்க தஞ்சாவூரில் மக்களின் பொழுது போக்கு இடங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது சிவகங்கை பூங்காவாகும். தஞ்சை மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் தஞ்சைக்கு சுற்றுலாவாக வரும் பயணிகள் சிவகங்கை பூங்காவிற்கு வந்து சுற்றி பார்த்துவிட்டுதான் செல்வார்கள்.

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871ம் ஆண்டு நகராட்சியால் உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் நீர்வற்றா குளமும் அமைந்துள்ளது. சுமார் 10 ஏக்கரில் பூங்காவும் உள்ளது. பூங்காவில் ஏராளமான பசுமையான மரங்கள், புல்வெளி செடிகள், மான்கள், நரி, முள்ளம்பன்றி, சீமை எலி, முயல், பறவைகள், கிளிகள் வளர்க்கப்பட்டு வந்தது. பின்னர் சிறுவர்களுக்கான ரயில், படகு சவாரி, நீச்சல் குளம், நீர்சறுக்கு விளையாட்டுகளும் கொண்டு வரப்பட்டது. இங்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் பேரும் வந்து சென்றனர்.

இத்தகைய சிறப்பு மிக்க பொழுது போக்கு தலமாக விளங்கிய சிவகங்கை பூங்காவை மேலும் செம்மைப்படுத்த ஏதுவாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் பூங்கா முழுவதும் புதிய நடைபாதை, அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், ஸ்கேட்டிங் தளம், சேதமடைந்த இடங்களில் சுற்றுச்சுவர்கள் என சிவகங்கை பூங்காவில் பணிகள் நடந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பதால் பூங்காவிலிருந்து மான்கள் கோடியக்கரை சரணாலயத்திலும், நரிகள் உள்ளிட்ட பறவைகளை வண்டலூர் மிருககாட்சி சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து சிவகங்கை பூங்காவில் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி தொடங்கியது. பழுதான பகுதிகளில் இருந்த சுவர்கள் இடிக்கப்பட்டு புதிய சுவர்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடைபாதை அமைக்கும் பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. இதில் டைல்ஸ் ஒட்டும் பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. தமிழகத்திலேயே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்காவில் தஞ்சை சிவகங்கை பூங்காதான் மிகப்பெரியதும், பழமையானதுமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவை பொதுமக்கள் அனைவரும் வந்து மகிழ்ச்சியோடு சுற்றிப்பார்க்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

Related Stories: