போராட்டத்திற்கு பணிந்தது ஒன்றிய அரசு.. அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்வு!!

புதுடெல்லி: அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப்படையை பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய ‘அக்னிபாத்’ ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்படுவார்கள். இத்திட்டத்தில் 4 ஆண்டு கால குறுகிய சேவை நிறைவு செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும்.

இந்நிலையில், ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் குறுகிய கால சேவை ஆட்சேர்ப்புக்கு பீகார், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ராணுவ வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். பீகாரில் பாபுவா மற்றும் சாப்ரா ரயில் நிலையங்களில் 3 ரயில்களுக்கு இளைஞர்கள் தீ  வைத்தனர். அரியானாவில் இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பு எதிரானதும் என்றும், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று  கூறி ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டம் வெடித்து வருவதால், இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடஇந்தியாவில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், 17.5 முதல் 21 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டம் இன்றும் தொடரும் பட்சத்தில், சட்டத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: