ஜம்முவில் 3 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்வு

ஜம்மு: ஜம்முவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை 3 மணி நேரம்  தளர்வு அளிக்கப்பட்டது. பாஜ செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததால் சர்ச்சை வெடித்தது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் பல்வேறு மாநிலங்களிலும் அவரை கைது செய்யக்கோரி போராட்டங்கள் வலுத்தன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் நுபுர் சர்மாவிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 9ம் தேதி அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் முதல் தடவையாக நேற்று முன்தினம் இரண்டு மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று 3 மணி நேரம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் காலை 9  மணிக்கு திறக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர். 3 மணி நேரத்துக்கு பின் மீண்டும் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

Related Stories: