திருக்கோயில்பணியாளர்களுக்கும் ஆண்டுக்கு இருமுறை குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படவேண்டும்: திருக்கோயில் நிர்வாகிகளுக்கு அறநிலையத்துறை

சென்னை: திருக்கோயிலில் பணியாற்றி வரும் அர்ச்சகர், பூசாரி, பட்டாச்சாரியார் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் குறைதீர்ப்பு கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படவேண்டும் என திருக்கோயில் நிர்வாகிகளுக்கு அறநிலையத்துறை சுற்றைக்கை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறியதாவது:

திருக்கோயிலில் பணியாற்றி வரும் அர்ச்சகர், பூசாரி, பட்டாச்சாரியார் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும். எனவே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் துறையின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் திருக்கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அனைத்து திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்படுகிறது.

திருக்கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும்போது கீழ்காணும் அறிவுரைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

1. திருக்கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் நாள், நேரம், இடம் ஆகிய விவரங்கள் அனைத்து திருக்கோயில் பணியாளர்களும் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.

2. இயன்ற வரையில் திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயோ திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களிலே தரைநீதிப்பு கூட்டம் நடத்தப்படவேண்டும்.

3. குறைதீர்ப்பு கூட்டத்தில் திருக்கோயில் பணியாளர்களால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தனிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

4. குறைதீர்ப்பு கூட்டத்தின்போது இணை ஆணையர்கள், ஆணையர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

5. குறைதீர்ப்பு கூட்டத்தில் திருக்கோயில் பணியாளர்களால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தொடர்புடைய திருக்கோயில் பணியாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும்.

6. துறை அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய இனங்களுக்கு திருக்கோயில் நிர்வாகிகள் முன்மொழிவினை உரிய அலுவலருக்கு ஒரு மாத காலத்திற்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

7. தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து திருக்கோயில்களிலும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவதை மண்டல இணை ஆணையர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

8. பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் எத்தனை திருக்கோயில்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது என்ற விவரம் குறித்த அறிக்கை மண்டல இணை ஆணையர்களால் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: