பல ஆண்டுகளாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலம் கட்டுவது எப்போது

 மண் பரிசோதனையுடன் கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டு

 டெண்டர் விட்டு பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

வேலூர்: பல ஆண்டுகளாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றில் பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், நீதிமன்றம், ஆவின் அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. இதேபோல் காட்பாடியில் விஐடி பல்கலைக்கழகம், ரயில் நிலையம், அரசு பல்கலைக்கழகம், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இருபகுதிகளுக்கும் பொதுமக்கள் 8 கி.மீ. சுற்றியே செல்ல வேண்டியுள்ளது.

இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க சத்துவாச்சாரிக்கும், காங்கேயநல்லூருக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாகும். இதற்கு 2011ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நபார்டு, கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 7.50 கோடி மதிப்பில் தரைப்பாலம் கட்டுவதற்கு காங்கேயநல்லூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த தரைப்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. வேகமாக வளார்ந்து வரும் வேலூர், காட்பாடி பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காங்கேயநல்லூர்- சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாலத்தை இணைக்கும் வகையில் புதிய இணைப்பு சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள காலி இடத்திலிருந்து இந்த சாலை தொடங்கி காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் முடியும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்துக்கு ஏற்கெனவே உள்ள சாலைகளை பயன்படுத்த முடியாது என்பதாலேயே ரங்காபுரம் போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள காலி இடத்தில் இருந்து புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாலாற்றின் குறுக்கே 500 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்தப் பாலம் அமைப்பதற்காக பிரம்மபுரத்தில் 26,908 சதுர மீட்டர் சத்துவாச்சாரியில் 24,322 சதுர மீட்டர் காங்கேயநல்லூரில் இணைப்புச் சாலைக்காக 18,184 சதுர மீட்டர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. தரைப்பாலத்துக்கு பதில் மேம்பாலம் கட்டுவதற்கு மட்டும் ரூ. 27 கோடிக்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அடுத்தகட்ட பணிகள் இன்றி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் சத்துவாச்சாரி முதல் புதிய பஸ்நிலையம் வரை பாலாற்றுக்கரை ஓட்டி இணைப்புச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் தனியாருக்கு சொந்தமான இடங்கள் அதிகளவில் வருகிறது.

இதனால் அந்த இடங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு ரூ. 22.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாலாற்றங்கரை ஒட்டி அரசு புறம்போக்கும் நிலம் அதிகளவில் உள்ளது. அதுவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களை கையகப்படுத்தினாலே போதுமான இடம் இணைப்பு சாலைக்கு கிடைத்துவிடும். தேவையில்லாமல் தனியாருக்கு சொந்தமான இடம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நெடுஞ்சாலைத்துறை மற்றும் அப்போதைய அதிமுக அரசு திட்ட மதிப்பீடு செய்ததில் குளறுபடி செய்துள்ளது. இதனால் இந்த திட்ட பணியை தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் பயன்படுத்தப்பட்டு வந்த சிறிய பாலமும் அடித்து செல்லப்பட்டது.

 இதனால் அவ்வழியாக சென்று கொண்டு இருந்தவர்கள் அவ்வழியை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அவர்கள் பல கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குளறுபடியாக உள்ள திட்ட அறிக்கையை நிவர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலம் கட்டும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலம் அமைப்பது தொடர்பாக அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு அறிக்கையை நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதில் சில குளறுபடிகளை சரி செய்து தருமாறு நெடுஞ்சாலைத்துறை தெரிவித்தது. அதன்பேரில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும்’ என்றனர்.

Related Stories: