மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் டி.ராஜேந்தர்: விமான நிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டி

சென்னை: இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து  மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அது வருமாறு: என் உடல்நிலை சரியில்லாதபோது நேரில் வந்து என்னை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  ஜி.கே.வாசன், பச்சைமுத்து, கமல்ஹாசன், ஐசரி கணேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் தாய் கழகமான திமுக தலைவர், தமிழக முதல்வர் அன்பை காட்டி, பாசம் காட்டி, தோள் தட்டி  என்னை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், இரண்டாவது முறையாகவும் குடும்பத்தினரோடு வந்து என்னை நேரில் சந்தித்து அன்பையும், ஆதரவையும் காட்டியபோது எனக்கு தோன்றியது, என்மீது அன்பு காட்டுவார் என்று கலைஞரை மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால், இப்போது அவரது மகன் ஸ்டாலினும் அன்பு காட்டி யதும் உயர்ந்துவிட்டேன். அவர் மீது இன்னும் மதிப்பு எனக்கு அதிகமாகியுள்ளது.என்னைப் பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல்சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன். நான் வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கு காரணம், என் மகன் சிலம்பரசன். அவர் கேட்டுக்கொண்டதால் நான் ஒப்புக்கொண்டேன். குருவாக இருந்து ஒரு நல்ல சிஷ்யனை உருவாக்கியதற்கு நான் பெருமைப்படுகிறேன். இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார். அவருடன் மனைவி உஷா மற்றும் குடும்பத்தினர் வெளிநாடு புறப்பட்டு சென்றனர். டி.ராஜேந்தர் வெளிநாட்டில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெறுகிறார்.

Related Stories: