மாடம்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

கூடுவாஞ்சேரி: மாடம்பாக்கம் ஊராட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் மாடம்பாக்கம், குத்தனூர், தாய் மூகாம்பிகை நகர், வள்ளலார் நகர், கார்த்திக் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் ஊராட்சிக்குட்பட்ட கார்த்திக் நகர் 3வது வார்டு பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில், 3வது வார்டு உறுப்பினர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார். மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் எஸ்ஐ வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக உதவி போலீஸ் கமிஷனர் பி.கே.ரவி, மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து மாடம்பாக்கம் ஊராட்சியில் தொடர் திருட்டு நடைபெறுவதை குறித்து பொதுமக்களிடையே கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

பின்னர், தனியாக நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் தங்க சங்கிலியை அணிந்து செல்லக்கூடாது என்றும், அவரவர் வீடுகள் மற்றும் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தவும் பொதுமக்களிடையே அறிவுரை கூறினர். அப்போது, போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘மாடம்பாக்கம் ஊராட்சியில் தொடர் திருட்டு பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், எனவே பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Related Stories: