ஆதாரில் பெயர் திருத்தம் செய்ய போலி வாக்காளர் அட்டை தயாரித்த கம்ப்யூட்டர் சென்டர்: திண்டிவனத்தில் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்

திண்டிவனம்: திண்டிவனத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த கம்ப்யூட்டர் சென்டருக்கு வருவாய் துறையினர் போலீசார் முன்னிலையில் சீல் வைத்தனர். திண்டிவனம்- சென்னை ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவர் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் ராகவேந்திரா பிரின்டர்ஸ் என்ற பெயரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வாக்காளர் அடையாள அட்டை எடுத்துள்ளார். அதை பயன்படுத்தி ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பணியாளர்கள் செல்வராஜ் கொடுத்தது போலி வாக்காளர் அடையாள அட்டை என அறிந்து அவரை வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

தகவலறிந்து சார் ஆட்சியர் அமித் வந்து செல்வராஜிடம் நடத்திய விசாரணையில் அவர் ராகவேந்திரா பிரின்டரில் வாக்காளர் அட்டை எடுத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று சார் ஆட்சியர் அமித், வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய் துறையினர் விசாரணை செய்தனர். இதில் அங்கு ஏராளமான போலி வாக்காளர் அட்டை தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சட்டத்திற்குப் புறம்பாக வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த கம்ப்யூட்டர் சென்டருக்கு போலீசார் முன்னிலையில் சீல் வைத்தனர். போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப் பயன்படுத்திய கணினியை பறிமுதல் செய்தனர். புகாரின்படி திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள சுரேசை தேடி வருகின்றனர்.

Related Stories: