பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு எதிராக குவைத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இந்தியர்களின் விசா ரத்து; பாகிஸ்தான், வங்கதேசத்தினர் மீதும் நடவடிக்கை

குவைத்: நுபுர் சர்மாவுக்கு எதிராக குவைத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இந்தியர்கள் மற்றுமின்றி பாகிஸ்தான், வங்கதேசத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக, இந்தியா மட்டுமின்றி முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் நாடுகளில் கண்டனங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 10ம் தேதி நுபுர் சர்மாவுக்கு எதிராக குவைத் நாட்டின் பஹாஹில் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின்கீழ், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மேற்கண்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் விசாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விபரங்கள் நாடு கடத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தொடர் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், இவர்கள் அனைவரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். மேலும், போராட்டத்தை நடத்த தூண்டியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து குவைத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குவைத்தில் வசிக்கும் அனைத்து மக்களும்,  நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும். எந்த விதமான  ஆர்ப்பாட்டங்களிலிருந்தும் அவர்கள் விலகி இருக்க வேண்டும். குவைத்தில்  நடந்த போராட்டத்தில் இந்திய, பாகிஸ்தான் மற்றும்  வங்கதேச முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களை கைது செய்து  நாடு கடத்தும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அவர்களின் விசாவும் ரத்து செய்யப்படும். அவர்கள்  மீண்டும் குவைத்துக்குள் நுழைவதற்கு நிரந்தர தடையும் விதிக்கப்படும்’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: