வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தீர்த்தவாரி

கும்பகோணம் : கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ராகு ஸ்தலமாக விளங்கும் நாகநாதசுவாமி கோயிலில் நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர்.

இத்தலத்தில் குன்று முலைக்குமரிக்கு (ஸ்ரீ கிரிகுஜாம்பிகை) இருபுறமும் திருமகள், கலைமகள், வீட்டிருந்து பணி செய்ய ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும் தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார். இத்தலத்தில் ராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும். இத்தலத்தில் ராகுபகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2ம் காலத்தில் ஸ்ரீநாகநாத சுவாமியை வழிபட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார் என வரலாறு கூறுகிறது.

இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகாசி விசாகப் பெருவிழா. கடந்த 3ம் தேதி காலை நாகநாதசுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருள, நந்தியம்பெருமான் பொறித்த திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து நாள்தோறும் சூர்ய பிரபை, சந்திர பிரபை, சேஷ, கிளி, பூத, பூதகி, கைலாச, காமதேனு, வெள்ளி ரிஷபம், யானை, அன்னபட்சி என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ம் நாளான நேற்று நண்பகல் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சூர்ய புஷ்கரணி கரையில் பஞ்சமூர்த்திகளும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, அஸ்திர தேவருக்கு குளத்தின் படிக்கரையில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சிவாச்சாரியார் அஸ்திர தேவருடன் மும்முறை முங்கி எழ, தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சூர்ய புஷ்கரணியில் புனித நீராடியும், கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

Related Stories: