மானாமதுரையில் நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா வெட்டு திருவிழா

மானாமதுரை:  மானாமதுரையில்  உள்ள சங்கு விநாயகர் கோயில் வளாகத்தில் கற்பூரசுந்தர சுவாமி, பொன்னர்  சங்கர், அருக்காணி, முத்துராக்கு, அக்காண்டீஸ்வரி, கோட்டை முனீஸ்வரர்  உள்ளிட்ட குலதெய்வங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி கடைசி  செவ்வாய்க்கிழமையில் இந்த குலதெய்வங்களுக்கு களரி பூஜை நடக்கிறது. இந்த  ஆண்டு களரிபூஜை கடந்த ஜூன் 7ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.

விழாவின்  4ம் நாளான நேற்று முன்தினம் உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து  திருவிளக்கு பூஜை, பூச்சொரிதல் விழாக்கு பின் சன்னதிமுன் பூக்குழி  இறங்குதல் நடந்தது. நள்ளிரவு கற்பூர சுந்தரசுவாமிக்கு நான்கு ஆடு, கோழிகளை  வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலியிடப்பட்ட ஆடுகளுடன் 60 படி அரிசி  சாதமும் சமைத்து படையலிடப்பட்டது. படையல் போடும் கோயிலுக்குள் உள்ள மற்ற  தெய்வங்களின் சன்னதிகள் மூடப்பட்டன.

இந்த பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்து  கொண்டனர். நேற்று மதியம் சாமியாட்டம், பரிவார தெய்வங்கள்,  காவல்தெய்வங்களுக்கு கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட களரி  பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: