படித்த பெண்களை வேலைக்கு செல்லும்படி கட்டாயப்படுத்த முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து

மும்பை: பெண் படித்தவர் என்பதால் அவரை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த  முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை  விசாரித்த நீதிபதி  கணவனை பிரிந்து வாழும் மனைவிக்கு பராமரிப்பு தொகையாக  மாதம்  ரூ.5000ம், அவருடன் வசிக்கும் தம்பதியின் 13 வயது மகளுக்கு  பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ.7000ம் வழங்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் கணவன்  மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு நேற்று முன்தினம் பெண் நீதிபதியான  பாரதி டேங்க்ரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது; பெண் பட்டப்படிப்பு படித்து வேலைக்கு செல்ல தகுதி உடையவராக இருந்தாலும், வேலை செய்வதும் வீட்டில் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். பொருளாதார ரீதியாக குடும்பத்துக்கு பெண்கள் பங்களிப்பு செய்வதை  நமது சமூகம் இன்னும் ஏற்கவில்லை. பெண்ணை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த  முடியாது. அவர் ஒரு பட்டதாரி.

இதனால், அவர் வீட்டில் அமர்ந்திருக்கலாம்  என்பது அர்த்தமல்ல. இன்று நான் நீதிபதியாக இருக்கிறேன். நாளை நான் வீட்டில்  இருக்கலாம். அப்போது நீங்கள் நீதிபதியாகும் தகுதி உள்ள நிலையில் வீட்டில்  இருக்கக் கூடாது என கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து  மனுதாரரான கணவரின் வக்கீல் வாதிடுகையில், ‘என் கட்சிக்காரரின் பிரிந்து  சென்ற மனைவிக்கு தற்போது நிலையான வருமான வருகிறது. இதை அவர் நீதிமன்றத்தில்  மறைத்து விட்டார். குடும்ப நல நீதிமன்றம் எனது கட்சிக்காரரின் முன்னாள்  மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டது அநீதி,’ என வாதிட்டார்.  இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories: