உபி அரசு புல்டோசர் நடவடிக்கை கான்பூர் வன்முறையாளர்கள் வீடுகள் இடித்து தரைமட்டம்: உறவினர்கள் வீடுகளும் இடிப்பு

கான்பூர்: கான்பூர் கலவரத்தில் கைதான முக்கிய குற்றவாளியின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமான புத்தம் புது கட்டிடத்தை நகர மேம்பாட்டு அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்து தள்ளினர். முகமது நபிகள் குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததை கண்டித்து, உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 3ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி, கடைகள், வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த கலவரத்தில் போலீசார் உட்பட 40 பேர் படுகாயமடைந்தனர். வன்முறையை தூண்டிய முக்கிய குற்றவாளி ஜாபர் ஹயாத் ஹஷ்மி உட்பட சிலரை கான்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளி ஹஷ்மியின் நெருங்கிய உறவினர் முகமது இஷ்தியாக் என்பவர் கான்பூர், ஸ்வரூப்நகரில் புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டி உள்ளார். இந்த கட்டிடத்தை நகர மேம்பாட்டு அதிகாரிகள் நேற்று புல்டோசர் மூலம் இடித்து தள்ளினர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறுகையில், ‘‘முக்கிய குற்றவாளி ஹஷ்மி ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இந்த கட்டிடத்தில் ஹஷ்மி முதலீடு செய்திருப்பதாக நம்பப்படுகிறது. அனைத்து சட்ட விதிமுறைகளின் படி இந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

இதே போல், இந்த வழக்கில் கைதான முசாமில், அப்துல் வக்கார் ஆகியோரின் ஆக்கிரமிப்பு வீடுகளின் ஒரு பகுதியையும் மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்து தள்ளினர். சமீபகாலமாக பாஜ ஆளும் மாநிலங்களில், இதுபோன்ற கலவரத்தை தூண்டுபவர்களின் வீடுகள், மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இதற்கிடையே, நுபுர் சர்மாவை கண்டித்து நேற்று முன்தினம் உபி.யில் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 237 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோல் வன்முறையை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

Related Stories: