உயிர்பலி வாங்கும் தோட்டியோடு- புதுக்கடை சாலை

*வேதனையில் வாகன ஓட்டிகள்

திங்கள்சந்தை :நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ேதாட்டியோட்டில் இருந்து பிரிந்து  புதுக்கடைக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. நாகர்கோவிலில் இருந்து திங்கள்சந்தை, கருங்கல், குளச்சல் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த மாநில நெடுஞ்சாலை வழியாக சென்று வருகின்றன.

எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும் இந்த நெடுஞ்சாலையில் தற்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த சில நாட்களில் மட்டும்  3 பேர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். கடந்த 16ம் தேதி மாலை ஸ்கூட்டரில் சென்ற பரசேரியை சேர்ந்த இளம்பெண் தர்ஷினி (31) நுள்ளிவிளையில் லாரி மோதி சம்பவ இடத்தில் தலை நசுங்கி பலியானார்.

29ம் தேதி இரவு கிருஷ்ணன் (61) என்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடல் சிதைந்து சம்பவ இடத்திலே இறந்தார். அதேபோன்று 2ம் தேதி இரவு பைக்கில் வந்த வாலிபர் அஸ்வின் ஸ்டெபின் (24) அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வாலிபர் மீது மோதிய அதே அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்ற தொழிலாளி தாணுதாஸ் (39) மீது மோதி அவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

 தோட்டியோடு - புதுக்கடை நெடுஞ்சாலையில் சமீபத்தில் அதிகரித்து வரும் விபத்துகளுக்கு காரணம் பராமரிப்பின்றி கிடக்கும் நெடுஞ்சாலைதான் என்கின்றனர் வாகன ஓட்டிகள். சில ஆண்டுகளுக்கு முன்பே இரணியலில் இருந்து பரசேரி வரை குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை இதுவரை தார் போடப்படாமலேயே கிடக்கிறது.  சாலையில் கால் பகுதி தோண்டப்பட்டு மண் ரோடாக கிடக்கும் நிலையில், முக்கால் பகுதி மட்டுமே தார் சாலையாக உள்ளது. குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்டு சுருங்கி கிடக்கும் இந்த நெடுஞ்சாலையில் பகல் வேளைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஓரளவு ரோட்டை கணித்து சென்று விடுகின்றனர்.

 இரவு நேரங்களில்  இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் குறுகி கிடக்கும் மண் சாலையால் திக்குமுக்காடி போகின்றனர். முக்கால் பகுதி ரோட்டில் இருபுறமும் உள்ள வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால்  வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு குறைந்த பட்சம் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பகுதியிலாவது தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறையாக மூடப்படாத குழிகள்

கண்டன்விளை அருகே மடவிளாகத்தில் ஆட்டோ மீது கான்கிரீட் லாரி கவிழ்ந்த விபத்து குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மடவிளாகம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட குழியை நிரப்பி விட்டு சென்றிருந்தனர். இந்த நிலையில் கண்டன்விளையில் இருந்து வந்த கான்கிரீட் கலவை லாரி எதிர்பாராத விதமாக மூடப்பட்ட குழிக்குள் இறங்கி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதி ஆட்டோ மீது கவிழ்ந்தது.

அதிர்ஷ்ட வசமாக லாரியின் கேபினுக்கும் காங்கிரீட் குடுவைக்கும் இடைப்பட்ட காலியாக உள்ள பகுதியில் சிக்கியதால் கற்பினி பெண், 3 குழந்தைகள் உட்பட 8 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இந்த விபத்துக்கு காரணம் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்டு முறையாக மூடப்படாததுதான் காரணம் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.  தற்போதும் இதேபோன்று இந்த நெடுஞ்சாலையில் கண்டன்விளை மொட்டவிளை பேயன்குழி உட்பட  பல பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்க குழிகள் தோண்டி வருகின்றனர். இவற்றையாவது முறையாக மூடி விபத்துக்கள் ஏற்படாத வகையில் சாலையை சீரமைக்க வேண்டும்.

விபத்தை தடுக்க தார் சாலை அவசியம்

ஏற்கனவே சுருங்கி கிடக்கும் இந்த சாலை சமீபத்தில் பெய்த தொடர் மழையால்  வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. தார் அரித்துச் செல்லப்பட்டு ஜல்லிகள் பெயர்ந்து   குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பராமரிப்பின்றி கிடக்கும் மாவட்டத்தின் முக்கிய  நெடுஞ்சாலையான இந்த ரோடை குறைந்த பட்சம் இரணியலில் இருந்து தோட்டியோடு வரையாவது சீரமைத்து தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: