சென்னையிலிருந்து 90 பயணிகளுடன் வந்த சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு

புதுச்சேரி: சென்னையிலிருந்து 90 பயணிகளுடன் நேற்று புதுச்சேரி வந்த சொகுசு  கப்பலுக்கு அரசு அனுமதியில்லாததால் சிலமணி நேரத்தில் அங்கிருந்து திரும்பி  சென்றது. புதுச்சேரியில் சுற்றுலா பெயரில் சமுதாய  சீர்கேடுகள் தலைதூக்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே சென்னையில்  இருந்து தனியார் நிறுவனம் ஒன்று சொகுசு கப்பலை இயக்கி வருகிறது. இந்த கப்பல் புதுச்சேரி வர எதிர்ப்பு கிளம்பியது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும்  சொகுசு கப்பலுக்கு புதுச்சேரியில் அனுமதியில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும் சென்னையில் இருந்து இந்த சொசுகு கப்பல்  10ம்தேதி புதுச்சேரி வரவிருப்பதாகவும், இதில் நூற்றக்கணக்கானோர் பயணித்து  புதுச்சேரி வந்தடைந்து இங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்துவிட்டு  திரும்பி செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது.

 

இந்த நிலையில் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து சொகுசு  கப்பல் புதுச்சேரி வந்தன. பாண்டி மெரீனாவில் இருந்து 4 நாட்டிக்கல்  தூரத்தில் அந்த கப்பல் நின்றிருந்த நிலையில், 90 பயணிகள் இருப்பதாகவும்,  அவர்கள் அங்கிருந்து சிறிய கப்பலில் புதுச்சேரிக்குள் வந்து துறைமுகத்தில்  இறங்கி சுற்றுலாத் தலங்களை சுற்றிபார்க்க அனுமதி கோரப்பட்டதாக தெரிகிறது.  ஆனால் அரசு தரப்பில் எந்த ஒப்புதலும் அளிக்கப்படவில்லை. மேலும்  முன்னெச்சரிக்கையாக கடலோர காவல்படை போலீசார், பாண்டி மெரீனா பகுதிகளில் பாதுகாப்புக்கு  நிறுத்தப்பட்டனர். அவர்கள் புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் ரோந்துப்  பணியில் ஈடுபட்டனர்.

 

அவர்கள் சொகுசு கப்பலில் உள்ள பயணிகள்  புதுச்சேரிக்குள் அரசின் ஒப்புதலின்றி நுழைந்து விடாமல் தடுக்க கண்காணிப்பு  மேற்கொண்டிருந்தனர். புதுச்சேரியில் பயணிகள் இறக்கிவிட அரசிடமிருந்து எந்த  ஒப்புதலும் நீண்டநேரம் போராடியும் கிடைக்காத நிலையில், எந்த ஆவணமும்  பெறப்படாததால் உடனடியாக அந்த சொகுசு கப்பல் அங்கிருந்து திருப்பி  அனுப்பப்பட்டன. அதிலிருந்த எந்த பயணிகளும் புதுச்சேரியை சுற்றிப்பார்க்க  அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் 2 மணி நேரம் பாண்டி மெரீனா அருகே  நிறுத்தப்பட்டிருந்த இந்த சொகுசு கப்பலை தகவல் கிடைத்துச் சென்ற பொதுமக்கள்  ஆர்வமுடன் சென்று பார்த்துவிட்டு திரும்பினர்.

Related Stories: