மதுரை மாவட்டத்தில் ஜனவரி - மே வரை தான் ஜல்லிக்கட்டு நடத்தமுடியும்: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு தொடர்பானவை நடத்த முடியும் என ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே பூமங்கலப்பட்டியைச் சேர்ந்த செல்லம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் உள்ள சோலை ஆண்டவர் சாமி கோயில் மற்றும் சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜூன் 12ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த இடத்திற்கு உரிய அனுமதி பெற்றுள்ளோம். இன்சூரன்ஸ் செய்துள்ளோம். தாசில்தாரின் பரிந்துரைப்படி ஆர்டிஓ விசாரித்து, அவரும் பரிந்துரைத்துள்ளார். ஆனால், வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுத்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்குமாறும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் விசாரித்தனர். அரசு கூடுதல் வக்கீல் ரவி ஆஜராகி, ‘‘‘‘மதுரை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் மட்டுமே ஜல்லிக்கட்டு தொடர்பானவை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட காலத்தை கடந்ததால் கலெக்டர் நிராகரித்துள்ளார். கலெக்டரின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. அரசிடம் முறையிட்டு தான் பரிகாரம் தேட முடியும்’’’’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், மனுதாரர்கள் தரப்பில் அரசிடம் முறையிட்டு உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: