ரூ.43.68 கோடி மதிப்பில் 16 கோயில்களில் 23 கட்டுமான பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்: புதிய கட்டிடங்கள் அனைத்தும் உடனடியாக பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

சென்னை: ₹43.68 கோடி மதிப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 16 கோயில்களில் 23 கட்டுமான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதே நேரத்தில், ₹9.67 கோடி மதிப்பில் 13 கோயில்களில் அன்னதானக் கூடம், வணிக வளாகம், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் ஓய்வுக் கூடம் உட்பட  14 கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது, சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட ₹96 லட்சம் மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், ஆளவந்தார் அறக்கட்டளை வைணவ பிரபந்த பாடசாலை கட்டும் பணிக்கும், ₹1.55 கோடி மதிப்பில் சென்னை, கொசப்பேட்டை கந்தசாமி மற்றும் ஆதிமொட்டையம்மன் கோயிலில் வணிக வளாகம் கட்டும் பணிக்கும், ₹2.20 கோடி மதிப்பில் மாதவரம் கைலாசநாதசுவாமி கோயிலில் புது திருக்குளம் கட்டும் பணிக்கும், ₹14.76 கோடி மதிப்பில் மதுரை மாவட்டம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம், திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டும் பணிக்கும், ₹2.56 கோடி மதிப்பில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அங்காளம்மன் கோயிலில் நவீன வசதிகளுடன் கூடிய முடிக் காணிக்கை மண்டபம், விருந்தினர் அறை, பக்தர்கள் ஓய்வு கூடம் மற்றும் 2 திருக்குளங்கள் புனரமைப்பு பணிக்கும், ₹2.28 கோடி மதிப்பில் சிவகங்கை மாவட்டம், மடப்புரம், அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் மண்டபம், வாகனம் நிறுத்துமிடம் கட்டும் பணிக்கும், ₹2.50 கோடி மதிப்பில் விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் விருந்து மண்டபம் கட்டும் பணிக்கும், ₹1.50 கோடி மதிப்பில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடை நாயகியம்மன் கோயிலில் புதிய வாரச்சந்தை அமைக்கும் பணிக்கும், ₹96 லட்சம் மதிப்பில் ஈரோடு மாவட்டம், அய்யம்பாளையம் வாழைதோட்டத்து அய்யன் கோயிலில் வீரவசந்தராயர் மேல்நிலைப்பள்ளி தரைத்தளம் மற்றும் முதல்தளம் கட்டும் பணிக்கும், ₹96 லட்சம் மதிப்பில் திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் வணிக வளாகம் கட்டும் பணிக்கும், 14.76 கோடி மதிப்பில் கரூர் மாவட்டம், குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் கம்பிவட ஊர்தி கீழ்நிலையம், கட்டணச் சீட்டு விற்பனை அறை, வரிசையில் நிற்பதற்கு மண்டபம் கட்டும் திட்டப்பணிகள் என மொத்தம் 16 கோயில்களில் ஒரு புதிய திருக்குளம் உட்பட 24 கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதே நேரத்தில், திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள கட்டிடங்களான ₹2.62 கோடி மதிப்பில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலில் திருக்குளம், ₹2.50 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் புதிய திருமண மண்டபம், ஓய்வு கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி ஆகிய பணிகளையும், ₹15 லட்சம் செலவில் மதுரை மாவட்டம், சோழவந்தான் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் வணிக வளாகம், ₹63 லட்சம் செலவில் மயிலாடுதுறை மாவட்டம், இன்னம்பூர், எழுந்தரிநாதர் திருக்கோயிலில் அன்னதானக் கூடம், ₹61 லட்சம் செலவில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அங்காளம்மன் கோயிலில் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறை மற்றும் குளியல் அறை கட்டும் பணிளையும், ₹57 லட்சம் செலவில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, சுப்பிரமணியசுவாமி கோயிலில் அன்னதான மண்டபம் கட்டும் பணிளையும், ₹49 லட்சம் செலவில் திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம், லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் பக்தர்கள் ஓய்வுக் கூடம், ₹48 லட்சம் செலவில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், மகாமாரியம்மன் கோயிலில் அன்னதானக் கூடம், ₹48 லட்சம் செலவில் மதுரை மாவட்டம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கூடுதல் வகுப்பறைகள், ₹30 லட்சம் செலவில் தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் முடிக்காணிக்கை மண்டபம், ₹30 லட்சம் செலவில் கரூர் மாவட்டம், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி, ₹28 லட்சம் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பச்சையம்மன் மன்னார் சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி, ₹9.67 கோடி செலவில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, சொக்கநாதசுவாமி கோயிலில் தரைத்தளத்தில் வாகன பாதுகாப்பு மண்டபம் மற்றும் முதல் தளத்தில் அலுவலகம் கட்டும் பணிகள் ஆக மொத்தம் ₹9.67 கோடி செலவில் 13 கோயில்களில் 14 புதிய கட்டிடங்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட ஒரு திருக்குளத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடங்கள் உடனடியாக பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக எம்பி செல்வம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மதுரை மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கர் கருமுத்து தி. கண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: