நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழு மரம் ஏறும் போட்டி

நத்தம் : நத்தம் அருகே கோயில் திருவிழாவில் நடந்த கழு மரம் ஏறும் போட்டியில் இளைஞர்கள் போட்டி, போட்டு கொண்டு மரம் ஏறினர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மணக்காட்டூரில் உள்ள முத்தாலம்மன் கோயில் உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று காலை அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம் அக்னி சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். பின்னர் படுகளம் என்ற பாரிவேட்டை, குட்டி கழு மரம் ஏறுதல், தொடர்ந்து பந்தய கழு மரம் ஏறுதலும் நடந்தது. இதில் இளைஞர்கள் போட்டி, போட்டிக் கொண்டு கழு மரத்தில் ஏறினர்.

முதலாவதாக சென்று கழு மரத்தின் உச்சியைத் தொட்டவருக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலையில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள், மணக்காட்டூர் ஊர் மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: