ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜை: ‘வேளாண்மை செழிக்கும்’ என பக்தர்கள் நம்பிக்கை

காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோயிலில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் சிறப்பு ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார். அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம்.இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் எதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஏப்ரல் 3ம் தேதி முதல் கோவை, பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான 3 கிலோ விபூதி மற்றும் 7 எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் பகுதியைச் சேர்ந்த சிவராம் என்பவரின் கனவில் நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்ய உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் கம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதுபற்றி கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது:சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். நிறைபடி கம்பு வைத்துள்ளதால் மழை வளம் பெருகி பயிர் செழிக்கும். நாட்டில் வேளாண்மை செழிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த 1969ம் ஆண்டு கம்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் கம்பு தானியம் பயன்பாடு அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: