கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

மதுராந்தகம்: கற்ப விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை மையம் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளத்தில் கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் பங்களிப்புடன் கூடிய கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவ மையத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது, அவருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் ஹரிஹரன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல் முறையாக 1986ம் ஆண்டு தமிழகத்தில் தான் எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அதை கண்டறிவதற்கான மருத்துவ வசதிகள் அப்போதே, இங்கு இருந்தன. அதன்பிறகு 1994ம் ஆண்டு தமிழகத்தில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு கலைஞரின் தீவிர முயற்சியால் 2010ம் ஆண்டு முதல் எய்ட்ஸ் குறித்த தீவிர விழிப்புணர்வு தமிழகமெங்கும் ஏற்படுத்தப்பட்டது.இதுபோன்ற செயல்பாடுகளின் காரணமாக இந்தியாவிலேயே எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் தற்போது மிக குறைவாக உள்ளது. தற்போது, தமிழகமெங்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் 2,953 எச்ஐவி நோய் கண்டறியும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், தமிழகத்தில் 103 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாக எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் 34 இளைப்பாறும் முகாம்கள் ஆண்டுதோறும் ரூ 2.41 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2009ம் ஆண்டு முதல் கலைஞரின் தீவிர முயற்சியால் எச்ஐவி நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கும் நோக்கில் ரூ25 கோடி  பங்களிப்பின் மூலமாக கிடைக்கபெறும் வட்டித் தொகையில் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் ரூ30 லட்சம் பொது மக்களுக்கும் ரூ12 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கும் இலவச எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட 1.21 லட்சம் பேருக்கு தமிழக அரசு சார்பில் சிகிச்சைகள் மற்றும் பல்வேறு உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாக தனியார் பங்கேற்புடன் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள 8 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக தற்போது கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சிகிச்சை மையம் திறந்து வைக்கப்படுகிறது. இந்த மையங்களை அணுகி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடையலாம்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்எல்ஏவும், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, மதுராந்தகம் ஒன்றிய திமுக செயலாளர்கள் சத்யசாய், பொன்.சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: