சர்வதேச கிரிக்கெட் மிதாலி ராஜ் ஓய்வு

புதுடெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் (39 வயது), அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரைப் போல, மகளிர் கிரிக்கெட்டில் 23 ஆண்டுகள் நிலைத்து நின்று விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் மிதாலி, இந்திய அணி கேப்டனாகவும் பல வெற்றிகளைக் குவித்து முத்திரை பதித்தவர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தவர் என்றாலும், இவரது பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அணிக்காக 1999ல் அறிமுகமான மிதாலி 12 டெஸ்டில் 699 ரன் (அதிகம் 214, சராசரி 43.68, சதம் 1, அரை சதம் 4), 232 ஒருநாள் போட்டியில் 7,805 ரன் (அதிகம் 125*, சதம் 7, அரை சதம் 64), 89 டி20 போட்டியில் 2,364 ரன் (அதிகம் 97*, சராசரி 37.52, அரை சதம் 17) குவித்துள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தகவல் பதிந்துள்ள மிதாலி, ‘ஒரு சிறுமியாக இந்திய அணியில் அறிமுகமாகி, 23 ஆண்டு நீண்ட நெடிய பயணத்தில் நிறைய சவால்களையும், சந்தோஷமான தருணங்களையும் சந்தித்துள்ளேன். இந்தியாவுக்காக விளையாடியதே எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இன்று ஓய்வு பெறுகிறேன். திறமையான இளம் வீராங்கனைகளின் கைகளில் இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும்... குறிப்பாக, ரசிகர்களுக்கு எனது  நன்றி’ என தெரிவித்துள்ளார்.அவருக்கு ஐசிசி, பிசிசிஐ நிர்வாகிகள், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related Stories: